இந்திய திரையுலகமே சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடும் ரஜினிக்கு வரும் 12ம் தேதி பிறந்த நாள். அவரது ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்து வரும் வேளையில் ரஜினிக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார் அஜீத்.
ரஜினி குறித்து அஜீத் கூறியிருப்பது:
வாழ்க்கை எவ்வள்வோ அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறது. அதில் முக்கியமானது ரஜினி சார் ஒரு முறை எனக்குக் கொடுத்த ‘லிவ்விங் வித் ஹிமாலயன் மாஸ்டர்’ புத்தகம். பொதுவாக சினிமா தவிர்த்து எனது உலகம் வேறு. குடும்பம் குழந்தைகள், விளையாட்டு இவற்றில் மட்டும்தான் கவனமாக இருப்பேன்.
புத்தகம் வாசிக்கும் பழக்கம் எனக்குக் குறைவு. ரஜினி சார் கொடுத்த புத்தகத்தைப் படித்த பிறகு எனக்குள்ளேயே ஏதோ மாற்றங்கள் நிகழ்வதை என்னால் உணரமுடிந்தது. இப்போதெல்லாம் படப்பிடிப்புக்குப் போகும்போதே என் குழந்தை பள்ளிக்கூடத்துக்குப் போகின்ற மாதிரி நானும் புத்தகங்களோடு தான் போகிறேன். உலக அரசியல் தலைவர்களின் ஆட்டோபயோகிராஃபி என வேறொடு திசைக்கு என்னை அழைத்துப் போனவர் சூப்பர் ஸ்டார்.
இவ்வளவு பெரிய உயரத்தைத் தொட்ட ஒரு நடிகர் மிகவும் எளிமையாக இருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய ஆச்சரியம். பில்லா படத்தை ரீமேக் பண்ணலாம் என்று முடிவெடுத்த பிறகு ரஜினி சாரிடம் ஒப்புதல் பெறுவதற்காகப் போனோம். “அதுக்கொன்ன அஜித்… தாராளமா பண்ணுங்க…” என்று உடனே ஒப்புக் கொண்டது மட்டுமில்லை. படத்தின் பூஜைக்கும் வந்திருந்து வாழ்த்தியது எவ்வளவு பெரிய கொடுப்பினை!.
பொதுவாக வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் முடிவெடுக்கிற போது மனதுக்கும் மூளைக்கும் போராட்டம் நடக்கும். நான் மனது சொல்வதையே கேட்பேன். அப்படித்தான் சூப்பர் ஸ்டார் எனக்கு உணர்த்திய சம்பவம் கடந்த ஆட்சியின் போது முதலமைச்சருக்கு நடந்த பாராட்டு விழா. என்னென்னவோ பேச ஆசைப்பட்டு குறிப்பெடுத்துக் கொண்டு போயிருந்தேன். பேசத் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் மனது ஜெயித்து, தடதடவென்று பேசிவிட்டேன்.
என்ன பேசினோம், எந்த இடத்தில் பேசியிருக்கிறோம் என்பதை நான் உணர்வதற்குள் ரஜினி சார் எழுந்து நின்று கைதட்டினார். அது மனது! பொதுவாக என்ன சந்திக்கின்ற பத்திரிகை நண்பர்கள் கேட்கின்ற கேள்வி. அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது ஊடகங்களும் எப்படியாவது அந்த இடத்துக்கும் இன்னொரு நடிகரை கொண்டுவந்து உட்கார வைக்க கிடந்து போராடுகின்றன.
எவரும் இட்டு நிரப்பக்கூடிய இடமல்ல அது. அது ரஜினி சாரின் இடம். அவர் துரோணாச்சாரியார். அவருக்குப் பின்னே இருக்கின்றவர்களில் அர்ஜுனன் இடத்துக்கு யார் வந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். நான் ஏகலைவனாக தூரத்திலேயே நின்றுகொள்கிறேன்.
ரஜினி சார் உடல்நிலை குறித்து செய்திகள் வந்தபோது அவர் நலம்பெறவேண்டி நான் பிரார்த்தனை பண்ணாத தெய்வங்களே இல்லை. இப்போது அவர் உடல்நிலை தேறிவிட்டார். தொடர்ந்து அவர் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என்பதே என் ஆசை. எல்லோருடைய ஆசையும்தானே அது.
No comments:
Post a Comment