Earn Money 9000 upto.. click it...

Wednesday, 7 December 2011

அஜித் – விஜய் – தி பெஸ்ட்

விஜயை எனக்குப் பிடிக்கும் என்பதற்காக அஜித்தை அடியோடு வெறுக்கும் அடி மடையனல்ல நான்.. விஜய் படத்தை எந்தளவு ஆர்வமாகப் பார்ப்பேனோ அதை விட ஒரு படி மேலாக அஜித் படத்தைப் பார்ப்பேன். காரணம் விஜயை விட அவர் என்ன ஒஸ்தியா செய்திருக்கிறார், அல்லது சொதப்பியிருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்காகத் தான். ஆனால் என்ன.. விஜய் படங்கள் எல்லாவற்றையும் தியேட்டரில் பார்ப்பேன். அஜித் படத்திற்கு “கட்டாயம் தியேட்டர் போகவேண்டும்” என நினைக்க மாட்டேன்.
அஜித் – விஜய். தமிழ் சினிமாவின் இரு பெரும் போட்டியாளர்கள். நல்ல நண்பர்கள். அதிகூடிய ரசிகர்களையும், ரசிகர் மன்றங்களையும் வைத்திருக்கும் நடிகர்கள். இவர்களின் வளர்ச்சி தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானதே!
எம்.ஜி.ஆர் – சிவாஜி படங்களை அடித்துக் கொள்வதற்கு அந்நாளில் நடிகர்கள் இல்லை. அதே போல் கமல் – ரஜினி படங்களையும் அடித்துக் கொள்வதற்கு இடைப்பட்ட காலங்களில் நடிகர் இல்லை என்று இருந்தது. அந்த தடைகளை முதலில் உடைத்தவர் விஜய். அந்த இமயங்களுக்கு போட்டியாக சிறு நடிகர்களும் மோதலாம் என்ற தைரியத்தைக் கொடுத்தவர் அவர். கூடவே அஜித்தும். இன்று விஜய் – அஜித்தைக் கூட அங்காடித்தெரு மகேஸ_ம், மைனா விதார்த்தும் முந்தலாம் என்ற நிலையை ஏற்படுத்தியவர்கள் அஜித் – விஜய்.
இதை நான் சொல்லவில்லை குணச்சித்திர நடிகை, இயக்குனர், ரி.வி தொகுப்பாளர் சுஹாசினி கூறினார். 
20 வருட சினிமா வாழ்க்கையில் இருவரும் ஐம்பது படங்கள் வரை நடித்து விட்டார்கள். (ரொம்ப கம்மிதான்) அதற்குள் என் மனம் கவர்ந்த பெஸ்ட் திரைப்படம் எது என்பது பற்றியதே இந்த தொடர்பதிவு.
விஜய் – காதலுக்கு மரியாதை – 1997
விஜயின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் இது. 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் மெஹா ஹிட்டான படம். எல்லா நடிகர்களின் ரசிகர்களையும், எல்லா வகை சினிமா விரும்பிகளையும் வயது வேறுபாடின்றி கவர்ந்த படம். இவ்வளவு ஏன்? விஜய் நடித்த படம் என்றால் அது காதலுக்கு மரியாதை ஒன்று தான் என நக்கல் அடிக்கும் அளவிற்கும் இப்படத்தின் வெற்றி கில்லி, போக்கிரி வெற்றியை விட சிறந்த எடுத்துக்காட்டு.
மலையாளத்தில் ஏற்கனவே வெளியான தனது படத்தை தமிழில் பாசில் இயக்கினார். பிறகு ஹிந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. படத்தின் வெற்றிக்குக் காரணம் படத்தின் கதையும், திரைக்கதையும் மட்டுமே! பக்கபலமாக இளையராஜாவின் இசையும் இருந்தது. இந்தப் படத்தில் விஜய் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் ஹிட் தான். ஏனெனில் விஜய் அன்று ஒரு பெரிய நடிகர் இல்லை. பூவே உனக்காக என்ற ஒரு பிரம்மாண்ட வெற்றியை மற்றும் தந்திருந்தார். ஆனாலும் படம் வெளியாக பிறகு அந்த கேரக்டருக்கு விஜயை விட வேறு ஒருவரும் பொருத்தமாக மாட்டார்கள் என விமர்சனம் வருமளவிற்கு அவரின் நடிப்பு ரொம்பவே ஜதார்த்தமாக இருந்தது.
கூடவே சாலினியும். பேபி சாலினியாக திரையில் பார்த்த எல்லோரும் ஹீரோயினாக அவரைப் பார்த்த போது மகிழ்ச்சியுடன் பிரமித்தார்கள். முதல் படம் என்ற தயக்கமோ என்னவோ கதையுடன் அவரின் நடிப்பு ஒன்றிப்போய்விட்டது.
கதை ரொம்பவே சிம்பிளானது. வழமையான காதலர்கள். பெண் வீட்டில் எதிர்ப்பு. தனியாக ஓடிப்போகிறார்கள். பின் மனம் திருந்தி பெற்றோரின் சம்மதத்துடனேயே திருமணம் செய்வோம். அல்லது பிரிந்து விடுவோம் என வருகிறார்கள். ஆனால் திரைக்கதை அமைத்த விதம் தான் எல்லோரையும் கவர்ந்தது. சாதாரணமாக நான், நீங்கள் எப்படி காதல் செய்வோமோ அதையே காட்சியாகவும் வைத்தது ரசனைக்குரியது. “ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்” என்பார்கள். ஆனால் அந்த மோகத்தை எட்டாமலே தங்கள் ஆசையை துறக்க முடிவெடுத்த இடம் பலே!
பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் காதலைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு ரீயூசன் தந்த படம் இது. விஜய்க்கு விருதுகளால் அளிக்கப்பட்ட அதியுயர் அங்கீகாரம் இதுவரைக்கும் இந்தப் படத்திற்கு மட்டுமே. தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருது.
விஜய் இதுபோன்ற மென்மையான படங்களில் நடிப்பதையே பலரும் விரும்புகிறார்கள். அதற்கு காவலனின் வெற்றியே சான்று.
அஜித் – காதல் கோட்டை – 1996

காதலுக்கு பல பரிமாணங்கள் உண்டு. அதன் ஒரு பரிமாணத்தை அழகாகக் காட்டிய படம் தான் காதல் கோட்டை. அஜித்திற்கும் தேவயானிக்கும் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் இது. முகம் பார்க்காத காதல். படத்தின் க்ளைமாக்ஸ் ரொம்பவே நன்றாக இருக்கும். நினைவு தெரிந்து நான் திரையில் பார்த்த முதல் படம். சுன்னாகம் நாகம்ஸ் திரையரங்கில் பார்த்தேன்.
அஜித்திற்கு ஆசை ஒரு வெற்றிப்படம் என்றாலும் அஜித்தின் நடிப்பை நிரூபித்ததும், அவரை சினிமாவில் நிலை நிறுத்தியதும் இந்தப் படம் என்றால் மிகையில்லை. ஆட்டோ டிரைவராக அசால்ட்டான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். குறிப்பாக பெண்களை..
தேவயானி தொலைத்த கான்ட்பாக்கை எடுத்துக் கொடுப்பதன் மூலம் லவ் ஸ்டார்ட் ஆகின்றது. இருவரும் பார்க்காமலே காதலிக்கிறார்கள். பட்டணம் வந்து அஜித்தை தேடி அவருடனே தன் காதலனை தேடி அலைகிறார். இறுதியில் கண்டு பிடிக்கிறார்.
கதையை கேட்கும்போது சிம்பிளா இருக்கும். ஆனால் திரைக்கதையில் பின்னியிருப்பார் இயக்குனர் அகத்தியன். இவருக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது கூட இந்தப் படத்திற்காக கிடைத்தது. அத்துடன் இன்னும் இரண்டு தேசிய விருதுகளும் படத்திற்கு கிடைத்தது.
அந்தக்காலத்தில் (1995 – 2000) ஆக்சன் படங்களுக்கு விஜயகாந்த் நல்ல தீனி போட்டுக்கொண்டிருந்ததால் அஜித் – விஜய் நல்ல காதல் படங்களில் நடித்தார்கள். இன்று அறிமுக நாயகர்களே ஆக்சன் படத்துடன் தான் களமிறங்குகின்றனரே!


பாசிலும், அகத்தியனும் காணாமல் போனது கவலையே! இவர்கள் மாறிவரும் சினிமாவிற்கு ஏற்ப தங்களை அப்டேட் செய்துகொள்ளாதது வருத்தமே! இந்த லிஸ்டில் பல இயக்குனர்கள் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment